ஒரு பந்தில் 7 ரன்கள் அடித்த நியூசிலாந்து: எப்படி தெரியுமா...!


ஒரு பந்தில் 7 ரன்கள் அடித்த நியூசிலாந்து: எப்படி தெரியுமா...!
x
தினத்தந்தி 9 Jan 2022 10:50 AM GMT (Updated: 9 Jan 2022 12:48 PM GMT)

வங்காளதேச அணியினர் நோ பால் மற்றும் வைடு வீசாமல் ஒரே பந்தில் 7 ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்காளதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியின் நியூசிலாந்து அணிக்கு ஒரே பந்தில் 7 ரன்கள் கிடைத்துள்ளது. இந்த நிகழ்வு முதல் நாள் உணவு இடைவேளை முடிந்து போடப்பட்ட முதல் ஓவரில் நடந்துள்ளது. அதாவது, வில் யங் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, பந்து பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்பிற்கு சென்ற பந்தை தவறவிட்ட நிலையில், பந்து பவுண்டரி நோக்கி சென்றது.

அப்போது வங்காளதேச வீரர் பவுண்டரியை தடுத்து, பந்தை நேராக விக்கெட் கீப்பரிடம் வீசினார். இதற்குள் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் 3 ரன்கள் எடுத்துவிட்டனர். ரன் அவுட் செய்யும் முயற்சியில், விக்கெட் கீப்பர் பந்தை தூக்கி எறிய, பந்து மறுபடியும் பவுண்டரிக்கே சென்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு ஒரே பந்தில் 7 ரன்கள் கிடைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 



Next Story