வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 521 ரன்கள் குவித்து டிக்ளேர்


வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 521 ரன்கள் குவித்து டிக்ளேர்
x
தினத்தந்தி 10 Jan 2022 4:21 AM GMT (Updated: 2022-01-10T09:51:44+05:30)

நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 252 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்காளதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதமும், வில் யங்கும் ஆட்டத்தை தொடர்ந்தனர். வில் யங் 54 ரன்னில் வெளியேற, கான்வேயுடன் ஜோடி சேர்ந்த கான்வே, வங்காளதேச பந்துவீச்சை துல்லியமாக எதிர்கொண்டு ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்தார். கான்வே சதமடித்து 109 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் டாம் லாதமை அவுட்டாக்க வங்காளதேச பவுலர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டும், பலிக்கவில்லை. முதல்நாள் ஆட்டநேர முடிவில், டாம் லாதம் 186 ரன்களில் களத்தில் இருந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அவர் இரட்டை சதம் அடித்ததுடன், விரைவாக 250 ரன்களை கடந்து அசத்தினார். அவர் 373 பந்துகளில் 34 பவுண்டரி, 2 சிக்சருடன், 252 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். பின்னர் நியூசிலாந்து அணி 128.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.


Next Story