வங்காளதேசத்துக்கு எதிரான 2-ஆம் டெஸ்ட்: வெற்றி வாய்ப்பில் நியூசிலாந்து அணி


வங்காளதேசத்துக்கு எதிரான 2-ஆம் டெஸ்ட்: வெற்றி வாய்ப்பில் நியூசிலாந்து அணி
x
தினத்தந்தி 11 Jan 2022 3:22 AM GMT (Updated: 11 Jan 2022 3:22 AM GMT)

3-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்காளதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, கேப்டன் டாம் லாதமின் 252 ரன்கள் உதவியுடன், 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசஅணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷத்மன் இஸ்லாம் (7), முகம்மது நைம் (0), நஜ்முல் ஹசேன் (4), கேப்டன் மொமினல் ஹக் (0), லிட்டன் தாஸ் (8) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, அந்த அணி 41.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

பாலோ ஆன் ஆன நிலையில், வங்காளதேச அணி தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சை விளையாடியது. இரண்டாம் இன்னிங்சிலும் வங்காளதேச பேட்ஸ்மேன்களில் ஒருவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதையடுத்து 3-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை அந்த அணி 53 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. 

ஆட்டம் முடிய இன்னும்  இரண்டு நாட்கள் உள்ள நிலையில், கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால், வங்காளதேச அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகி விட்டது.


Next Story