ஐ.பி.எல். மெகா ஏலம்: ஏலப்பட்டியலில் 1,214 வீரர்கள் பதிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Jan 2022 11:28 PM GMT (Updated: 22 Jan 2022 11:28 PM GMT)

வார்னர், அஸ்வின், ரபடா உள்ளிட்டோரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி 8 அணிகளும் மொத்தம் 27 வீரர்களை தக்க வைத்து கொண்டு மற்றவர்களை விடுவித்தது. புதிய அணிகளான ஆமதாபாத் அணி ஹர்திக் பாண்ட்யா, ரஷித்கான், சுப்மான் கில் ஆகியோரையும், லக்னோ அணி நிர்வாகம் லோகேஷ் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளது. பாண்ட்யாவும், ராகுலும் அந்தந்த அணிகளின் கேப்டன்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ராகுலுக்கு ஐ.பி.எல்.-ல் அதிகபட்சம் என்று சொல்லும் அளவுக்கு ரூ.17 கோடி ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

மற்ற அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐ.பி.எல். மெகா ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 மற்றும் 13-ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதையொட்டி 318 வெளிநாட்டவர், 896 இந்தியர் என்று மொத்தம் 1,214 வீரர்கள் ஏலப்பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய தரப்பில் 59 பேரும், தென்ஆப்பிரிக்கா சார்பில் 48 வீரர்களும் தங்களது பெயரை இணைத்துள்ளனர். பூடான், நமிபியா, ஓமன், நேபாளம், அமெரிக்க வீரர்களும் இந்த முறை ஆர்வம் காட்டுகிறார்கள்.

7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தொடர் நாயகன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, தென்ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிஸ்சிஸ், குயின்டான் டி காக், ரபடா, வெஸ்ட் இ்ண்டீசின் வெய்ன் பிராவோ, நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட், இங்கிலாந்தின் மார்க்வுட், ஜாசன் ராய் உள்பட 49 வீரர்களுக்கு தொடக்க விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்குர், தேவ்தத் படிக்கல், அம்பத்தி ராயுடு, முகமது ஷமி, ஹர்ஷல் பட்டேல் ஆகியோரும் ரூ.2 கோடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரூ.2 கோடியில் இருந்து இவர்களது ஏலத்தொகை ஆரம்பிக்கும்.

வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா (3 பேரும் இந்தியர்), ஆரோன் பிஞ்ச், நாதன் லயன் (ஆஸ்திரேலியா), இயான் மோர்கன், பேர்ஸ்டோ, டேவிட் மலான் (இங்கிலாந்து), ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) உள்ளிட்டோரின் அடிப்படை விலை ரூ.1½ கோடி என்றும், ரஹானே, பியுஸ் சாவ்லா, விருத்திமான் சஹா, கேதர் ஜாதவ், டி.நடராஜன், பிரசித் கிருஷ்ணா, ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன், இலங்கையின் ஹசரங்கா, நியூசிலாந்தின் டிவான் கான்வே, தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம், ஷம்சி, வான்டெர் துஸ்சென் போன்ற வீரர்களுக்கு ரூ.1 கோடி என்றும் தொடக்க விலையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கும் தமிழக ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் சர்வதேச போட்டியில் ஆடாததால் அவரது ஆரம்ப விலை ரூ.20 லட்சமாகும். ஆனாலும் ஏலத்தில் அவருக்கு கடும் கிராக்கி இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான், இஷான் கிஷன், ஷர்துல் தாக்குர், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், வார்னர் ஆகியோரை இழுக்கவும் பல அணிகள் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சிறைதண்டனை அனுபவித்தவரான இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் 38 வயதான ஸ்ரீசாந்தும் ஏலத்தில் உள்ளார். அவரது தொடக்க விலை ரூ.50 லட்சமாகும். இந்தியாவின் புஜாரா, தென்ஆப்பிரிக்காவின் இங்கிடி, மார்கோ ஜான்சென் ஆகியோரது குறைந்தபட்ச விலையும் ரூ.50 லட்சமாகும்.

இந்த பட்டியல் 10 அணிகளின் உரிமையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விருப்பம் உள்ள வீரர்களின் விவரத்தை ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் இந்த வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு ஏலத்திற்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகபட்சமாக 25 வீரர்களை அணியில் நிரப்பும் பட்சத்தில், மொத்தம் 217 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், வெஸ்ட் இண்டீசின் அதிரடி ஜாம்பவான் 42 வயதான கிறிஸ் கெய்ல் போன்ற நட்சத்திரங்கள் ஏலப்பட்டியலில் இல்லை. இதனால் அவர்கள் 15-வது ஐ.பி.எல்.-ல் ஆடமாட்டார்கள் என்பது தெளிவாகிறது.


Next Story