மிடில் ஓவரில் சிறப்பாக செயல்பட வேண்டும்: பயிற்சியாளர் டிராவிட் பேட்டி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Jan 2022 8:28 PM GMT (Updated: 2022-01-25T01:58:51+05:30)

மிடில் ஓவரில் நமது அணி இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்தார்.

கேப்டவுன், 

கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி (1-2) தோல்வியை தழுவியது.

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மிடில் ஓவரில் பேட்டிங்கில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். நமது ஆடும் லெவன் அணியின் வீரர்கள் கலவை சமநிலை கொண்டதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். வழக்கமாக 6-வது, 7-வது மற்றும் 8-வது வரிசையில் விளையாடும் ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் காயத்தில் உள்ளதால் அணியில் இடம் பெறவில்லை. அவர்கள் அணிக்கு திரும்பும் போது நமது பேட்டிங் வரிசை மேலும் வலுப்பெறும். அத்துடன் அவர்கள் அணியில் இடம் பெறுகையில் நமது ஆட்ட பாணியில் சற்று வித்தியாசமான முறையை கடைப்பிடிக்க முடியும்.

முதலாவது மற்றும் 3-வது போட்டியில் இலக்கை நோக்கி விளையாடுகையில் (சேசிங்) நமது அணி 30-வது ஓவர் வரை நல்ல நிலையில் தான் இருந்தது. அந்த இரண்டு ஆட்டங்களிலும் நாம் இலக்கை விரட்டிப்பிடித்து இருக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் நாம் மோசமான ஷாட் ஆடியது அணிக்கு பாதகமாக அமைந்தது. நெருக்கடியான நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினோம். இதேபோல் மிடில் ஓவர்களில் விக்கெட் எடுப்பதிலும் நாம் சற்று பின்தங்கி தான் இருக்கிறோம். அந்த விஷயத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

லோகேஷ் ராகுல் குறித்து...

வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பை அளித்தனர். அடுத்து வரும் ஆட்டங்களில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நாங்கள் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் செய்யவில்லை. அந்த வரிசையில் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நினைக்கிறோம். அதேநேரத்தில் வீரர்களும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நன்றாக விளையாட வேண்டியது முக்கியமானதாகும்.

கேப்டன்ஷிப்பை பொறுத்தவரையில் லோகேஷ் ராகுல் நன்றாகவே செயல்பட்டார். குறிப்பாக தோல்வியை சந்திக்கையில் அணியை வழிநடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. கேப்டனாக லோகேஷ் ராகுலுக்கு இது தான் முதல் தொடராகும். கேப்டன் பதவியில் இருப்பவர்கள் சக வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டு வரும் லோகேஷ் ராகுல் வருங்காலத்தில் கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.


Next Story