இந்தியா மேலும் ஒரு உலக கோப்பை வெல்வதை பார்க்க விரும்புகிறேன் - சச்சின் பேட்டி


இந்தியா மேலும் ஒரு உலக கோப்பை வெல்வதை பார்க்க விரும்புகிறேன் - சச்சின் பேட்டி
x
தினத்தந்தி 28 Jan 2022 10:26 PM GMT (Updated: 28 Jan 2022 10:26 PM GMT)

இந்தியா மேலும் ஒரு உலக கோப்பை வெல்வதை பார்க்க விரும்புவதாக சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

இந்தியா மேலும் ஒரு உலக கோப்பையை வெல்வதை பார்க்கும் ஆவலில் இருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி 2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவிதமான உலககோப்பையையும் வென்றதில்லை. 2015 மற்றும் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரைஇறுதியில் தோல்வி அடைந்தது. 2012, 2014, 2016, 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளிலும் இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியது. இதே ஏமாற்றத்துடன் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ஓரங்கட்டப்பட்டார். 

தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ரவிசாஸ்திரியின் பதவி காலமும் முடிந்து போனது.இதையடுத்து தற்போது புதிய கூட்டணி இணைந்துள்ளது. இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். பயிற்சியாளர் பணியை முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கவனிக்கிறார். 

இவர்கள் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியையும், அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியையும் எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நாம் உலககோப்பையை வென்று 11 ஆண்டுகள் நிறைவடைகிறது. அடுத்த உலக கோப்பைக்காக நீண்ட காலம் காத்திருக்கிறோம். நான் உள்பட அனைவரும் இந்தியா மீண்டும் ஒரு உலக கோப்பையை வெல்வதை பார்க்க விரும்புகிறோம். 

எல்லா கிரிக்கெட் வீரர்களும் இந்த கோப்பைக்காகத் தான் விளையாடுகிறார்கள். உலககோப்பையை விட பெரிதானது ஒன்றுமில்லை. அது 20 ஓவராக இருந்தாலும் சரி, 50 ஓவராக இருந்தாலும் சரி உலக கோப்பை எப்போதும் சிறப்பு வாய்ந்தது தான். அப்படித்தான் நான் உணருகிறேன்.

ரோகித் சர்மா- டிராவிட் ஒரு அற்புதமான ஜோடி. இவர்கள் இருவரும் சிறப்பான பங்களிப்பை அளிப்பார்கள். தங்களின் திறமைக்கு ஏற்ப சீரிய முறையில் தயாராவார்கள் என்பது தெரியும். இருவருக்கும் பல வீரர்களின் ஆதரவு இருக்கிறது. சரியான நேரத்தில் அந்த ஆதரவை பெறுவது முக்கியமானது. நிச்சயம், ஒவ்வொருவரும் போதுமான கிரிக்கெட் விளையாடியுள்ளனர். 

இந்த பயணத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு டிராவிட்டிடம் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் உள்ளது. எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காமல் இருப்பது முக்கியமான ஒன்று. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து முன்னேறுவோம். இந்த கூட்டணி உலக கோப்பையை வென்று தரும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story