விராட் கோலி கேப்டனாக சாதித்தவற்றை எண்ணி பெருமை கொள்ளலாம் - ரிக்கி பாண்டிங் புகழாரம்!


விராட் கோலி கேப்டனாக சாதித்தவற்றை எண்ணி பெருமை கொள்ளலாம் - ரிக்கி பாண்டிங் புகழாரம்!
x
தினத்தந்தி 31 Jan 2022 9:23 AM GMT (Updated: 31 Jan 2022 9:23 AM GMT)

கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியது அதிர்ச்சி அளித்தது என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.

துபாய்,

ஐ சி சி சார்பில் நடத்தப்பட்ட ‘ஐசிசி ரிவியு’ நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் தொடர்பான சுவாரசியமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். 

அப்போது விராட் கோலிக்கு அவர் புகழாரம் சூட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- 

விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியிருக்கக் கூடாது. அவருடைய இந்த முடிவு அதிர்ச்சி அளித்தது. பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த எண்ணி அவர் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும்.

கேப்டனாக அவர் சாதித்தவற்றை எண்ணி பெருமை கொள்ள வேண்டும்.இப்போது கேப்டன் பொறுப்பின் நெருக்கடி இல்லாத காரணத்தால் பேட்டிங்கில் அவர் இன்னும் அதிகமான சாதனைகளை செய்ய முடியும்.

அவருடைய கேப்டன்சியின் கீழ் இந்திய அணி வெளிநாடுகளில் பல சாதனைகளை புரிந்துள்ளது. அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் போது அவருடன் உரையாடியதில், அவர் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விலகப்போவதாக கூறினார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விருப்பம் உள்ளது என்றும் கூறினார். ஆனால் தற்போது அவர்  டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி அதிர்ச்சி அளித்துள்ளார்.

உலக கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு வகிப்பது மிக கடினமான பணி. ஆனால் கோலி 7 ஆண்டுகளாக கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அவருக்கு 33 வயதாகிறது. இன்னும் சில ஆண்டுகள் அவர் கிரிக்கெட் விளையாடுவார். அதனால் அவரால் பல சாதனைகளை படைக்க முடியும்.

நான் கேப்டனாக ஆஸ்திரேலிய அணிக்கு பொறுப்பேற்ற போது அஸ்திரேலியா கிரிக்கெட்டில் தன்னிகரற்ற அணியாக ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஆனால் கோலி கேப்டனாக பொறுப்பேற்கும் முன், இந்திய அணி உள்ளூர் போட்டிகளில் அதிகம் வெற்றி பெற்று வந்த நிலையிலும் வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர் கேப்டன் ஆன பின் அந்த விஷயத்திலும் இந்திய அணி முன்னேறி உள்ளது.

இவ்வாறு பாண்டிங் கூறினார்.அவரை தொடர்ந்து கேப்டனாக உள்ள ரோகித் சர்மாவுக்கும் பண்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கோலியின் கேப்டன்சியின் கீழ், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய  24 தொடர்களில் வெறும் 5 டெஸ்ட் தொடர்களை மட்டுமே இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் ஒரு தொடரை கூட இழக்கவில்லை.

Next Story