ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 24 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 24 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து
x
தினத்தந்தி 3 Feb 2022 12:00 AM GMT (Updated: 2022-02-03T05:30:15+05:30)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

ஆன்டிகுவா, 

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 24 ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் சற்று நேரம் தாமதமாக தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் தாமஸ் (50 ரன்) அரைசதம் விளாசினாலும், அவருடன் இணைந்த வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 35.1 ஓவர்களில் 136 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னதாக 30-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சுமார் 30 நிமிடம் பாதிக்கப்பட்டதால் போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

7-வது விக்கெட் இணையான ஜார்ஜ் பெல், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் ஹார்டன் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்ததுடன் அணி கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர். 47 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்தது. ஜார்ஜ் பெல் 56 ரன்னுடனும் (67 பந்து, 6 பவுண்டரி), அலெக்ஸ் ஹார்டன் 53 ரன்னுடனும் (36 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் ஜட்ரன், நூர் அகமது தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு 47 ஓவர்களில் 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நங்கேயலியா கரோத் (0) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் 2-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த முகமது இஷாத் (43 ரன்கள்), அல்லாஹ் நூர் (60 ரன்கள்) ஜோடி நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். அடுத்து வந்த அப்துல் ஹாதி (37 ரன்கள் ), பிலால் முகமது (33 ரன்கள்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

46-வது ஓவரில் பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் ரீஹன் அகமது ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அவர் அந்த ஓவரில் நூர்முகமது (25 ரன்) உள்பட 3 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். இதனால் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் ஆப்கானிஸ்தானின் முயற்சிக்கு முட்டுக்கட்டை விழுந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. இங்கிலாந்து தரப்பில் ரீஹன் அகமது 4 விக்கெட்டும், தாமஸ் அஸ்பின்வால் 2 விக்கெட்டும் சாய்த்தனர். இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் பெல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த அணி கடைசியாக 1998-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

Next Story