ஜூனியர் உலக கோப்பையை இந்தியா வெல்லும்! இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல்லின் தந்தை நம்பிக்கை!


ஜூனியர் உலக கோப்பையை இந்தியா வெல்லும்! இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல்லின் தந்தை நம்பிக்கை!
x
தினத்தந்தி 3 Feb 2022 4:25 PM GMT (Updated: 3 Feb 2022 4:25 PM GMT)

இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வெஸ்ட்இண்டீசில் 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) நடைபெற்று வருகிறது. ஆன்டிகுவாவில் நேற்று  நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணி, 3 தடவை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

இப்போட்டியில் இந்திய அணி 96 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இறுதி சுற்றுக்குள் தொடர்ந்து 4வது முறையாக அடியெடுத்து வைத்தது. இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

இந்த நிலையில், யாஷ் துல்லின் தந்தை விஜய் துல், இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கையுடன் உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. எதிரணிகளும் சிறப்பாக விளையாடின. அப்படி இருக்கையில், இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தேசத்தின் விருப்பமாக உள்ளது. நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு கேப்டனாக யாஷ் சிறப்பான கிரிக்கெட் குறித்த வியூகங்களை கொண்டவர். எந்த பந்துவீச்சாளர் எந்த பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசினால் சரியாக இருக்கும் என்பதை அவர் துல்லியமாக கணித்து போட்டியின் நடுவே உடனுக்குடன் மாற்றங்களை செய்பவர்.

இந்திய அணியுடன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் வி வி எஸ் லக்‌ஷ்மண் பயணித்துள்ளார். அவர் உடனிருப்பது வீர்ரகளுக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story