ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி - இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி - இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 5 Feb 2022 1:35 AM GMT (Updated: 5 Feb 2022 1:35 AM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆன்டிகுவா,

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டாவையும், கால்இறுதியில் வங்காளதேசத்தையும், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

டாம் பிரிஸ்ட் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், கனடாவையும், கால்இறுதியில் தென்ஆப்பிரிக்காவையும், அரைஇறுதியில் ஆப்கானிஸ்தானையும் பதம் பார்த்து தோல்வியே சந்திக்காமல் இறுதி சுற்றை எட்டியிருக்கிறது. 

1998-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. அந்த அணி 2-வது முறையாக மகுடம் சூட கடுமையாக போராடும். அதே சமயம் 4 முறை சாம்பியனான (2000, 2008, 2012, 2018) இந்திய அணி, 5-வது முறையாக கோப்பையை கையில் ஏந்தும் ஆவலுடன் உள்ளது. 

2008-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனும், தற்போதைய முன்னணி வீரருமான விராட்கோலி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதும் இந்திய ஜூனியர் வீரர்களுடன் வீடியோ காலில் கலந்துரையாடினார். நெருக்கடி மிகுந்த இறுதிப்போட்டியில் என்ன மாதிரி செயல்பட வேண்டும் என்பது குறித்து அவர் ஆலோசனை வழங்கி இருக்கிறார். இது நிச்சயம் இந்திய இளம் படையினருக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: அங்க்ரிஸ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், ரஷீத், யாஷ் துல் (கேப்டன்), ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர், நிஷாந்த் சிந்து, தினேஷ் பானா, கவ்ஷல் தாம்பே, ராஜ் பாவா, விக்கி ஆஸ்ட்வால், ரவிகுமார்.

இங்கிலாந்து: ஜார்ஜ் தாமஸ், ஜேக்கப் பெத்தேல், டாம் பிரிஸ்ட் (கேப்டன்), ஜேம்ஸ் ரீவ், வில்லியம் லக்ஸ்டன், ஜார்ஜ் பெல், ரீஹன் அகமது, அலெக்ஸ் ஹார்டன், ஜேம்ஸ் சேல்ஸ், தாமஸ் ஆஸ்பின்வால், ஜோஷ்வா பாய்டென்.
 

Next Story