ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் லாங்கர் திடீர் ராஜினாமா


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் லாங்கர் திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 5 Feb 2022 11:05 PM GMT (Updated: 2022-02-06T04:35:21+05:30)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜஸ்டின் லாங்கர் நேற்று திடீரென விலகினார்.

ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஆஸ்திரேலிய அணி சிக்கியதை அடுத்து அப்போதைய கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னருக்கு ஒரு ஆண்டு தடையும், பந்தின் தன்மையை மாற்ற உப்புத்தாளை வைத்து தேய்த்த கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லாவிட்டாலும் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டேரன் லீமன் விலகினார். இதைத்தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரான ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் வருகிற ஜூன் மாதத்துடன் நிறைவடைய இருந்தது.

கடினமான பயிற்சி முறையை கடைப்பிடிப்பதாக சில சீனியர் வீரர்கள் லாங்கர் மீது புகார் தெரிவித்து இருந்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பையையும், சமீபத்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலிய அணி வென்றதால் ஜஸ்டின் லாங்கரின் பதவி காலம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

லாங்கர் விலகல்

ஜஸ்டின் லாங்கரின் ஒப்பந்தத்தை குறுகிய காலத்துக்கு, அதாவது இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை நீட்டிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பியது. ஆனால் தனது ஒப்பந்தத்தை நீண்ட கால அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் என்று லாங்கர் வேண்டுகோள் வைத்தார். ஆனால் அதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து 51 வயதான ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், உதவி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டை இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

பாண்டிங் கண்டனம்

லாங்கருக்கு பதவி நீட்டிப்பு வழங்காத ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘உண்மையிலேயே ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு ் இது ஒரு சோகமான நாள். கடந்த 6 மாதங்களில் சிறந்த சில நபர்களை (முன்னாள் கேப்டன் டிம் பெய்ன், லாங்கர்) ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கையாண்ட விதம் சங்கடத்தை தருகிறது. லாங்கருக்கு, கேப்டன் கம்மின்ஸ் வெளிப்படையாக ஆதரவு அளிக்காதது எனக்கு ஏமாற்றம் அளித்தது. அதேநேரத்தில் அவர் இரு தரப்புக்கும் இடையில் மாட்டி இருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. லாங்கரின் கடினமான பயிற்சி முறையால் வீரர்கள் மற்றும் அணியின் உதவியாளர்களில் மிகவும் சிறிய குழுவினரே அதிருப்தி அடைந்துள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்காக முழு ஈடுபாட்டுடன் ஆத்மார்த்தமாக உழைத்த நல்ல பயிற்சியாளரை இதுபோல் வெளியேற்றி இருக்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.


Next Story