ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டங்களை தவற விடும் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா வீரர்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டங்களை தவற விடும் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா வீரர்கள்
x
தினத்தந்தி 9 Feb 2022 9:25 PM GMT (Updated: 9 Feb 2022 9:25 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டங்களை ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா வீரர்கள் தவறவிட உள்ளனர்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் கடைசி வாரத்தில் அனேகமாக மார்ச் 27-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் தொடக்ககட்ட ஆட்டங்களில் விளையாட முடியாத நிலைமை உருவாகியுள்ளது. அதாவது வார்னர், கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், ரபடா, அன்ரிச் நோர்டியா போன்ற வீரர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை ஐ.பி.எல். கிரிக்கெட்டை தவறவிடப்போகிறார்கள்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணியின் அந்த தொடர் ஏப்ரல் 5-ந்தேதி நிறைவடைகிறது. அதன் பிறகே தங்கள் அணி வீரர்கள் ஐ.பி.எல்.-ல் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெளிவுப்படுத்தி உள்ளது. இதே போல் வங்காளதேச அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் மார்ச் 18-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடக்கிறது.

வங்காளதேச தொடர் முடிந்ததும் தங்கள் அணி வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் இணைவார்கள் என்பதை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் சுட்டிகாட்டியுள்ளது. இதே போல் இங்கிலாந்து அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மார்ச் 28-ந் தேதி முடிவடைவதால் இவ்விரு அணி வீரர்களும் ஓரிரு ஐ.பி.எல். ஆட்டங்களில் ஆட முடியாது.

Next Story