'சாதித்தது நான்; புகழ் அவருக்கு' - ரவிசாஸ்திரி மீது ரஹானே கடும் தாக்கு


சாதித்தது நான்; புகழ் அவருக்கு - ரவிசாஸ்திரி மீது ரஹானே கடும் தாக்கு
x
தினத்தந்தி 10 Feb 2022 9:16 PM GMT (Updated: 10 Feb 2022 9:16 PM GMT)

மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் ரஹானேவின் சதத்தால் இந்தியா வெற்றி பெற்றது.

புதுடெல்லி,

இந்திய அணி, 2020-21-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சரித்திரம் படைத்தது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்தியா வெறும் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு கேப்டன் விராட் கோலி, குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்பினார். 

இதையடுத்து கேப்டன் பொறுப்பை ஏற்ற அஜிங்யா ரஹானே தலைமையில் இந்தியா எழுச்சி பெற்றது. மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் ரஹானேவின் சதத்தால் இந்தியா வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக இந்தியா தோற்கடித்தது. இந்த மகத்தான வெற்றி தனது பயிற்சியின் சாதனையில் முக்கியமானது என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அடிக்கடி கூறி வருகிறார்.

இந்த நிலையில் இந்த தொடர் குறித்து நேற்று பேட்டி அளித்த அஜிங்யா ரஹானே, ரவிசாஸ்திரியின் பெயரை குறிப்பிடாமல் அவர் மீது மறைமுக தாக்குதல் தொடுத்தார். ரஹானே கூறுகையில், ‘ஆஸ்திரேலிய மண்ணில் நான் என்ன சாதித்தேன், எந்த அளவுக்கு பங்களிப்பு அளித்தேன் என்பது தெரியும். அது பற்றி யாருக்கும் எடுத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கான புகழை தேடிச்செல்வது எனது இயல்பான குணம் கிடையாது. ஒரு கேப்டனாக களத்திலும், வீரா்களின் ஓய்வறையிலும் சில வியூகங்களை நானே மேற்கொண்டேன். அதனால் வெற்றி கிட்டியது. ஆனால் வேறு ஒருவர் அதற்கான பாராட்டுகளை எடுத்துக் கொண்டார். இருப்பினும் எனக்கு தொடரை வென்றதே முக்கியமானதாக இருந்தது. வரலாற்று சிறப்புமிக்க அந்த வெற்றி உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது’ என்றார்.

மேலும் ரஹானே கூறுகையில், ‘ஆஸ்திரேலிய தொடரை வென்ற பிறகு பாராட்டை எடுத்துக் கொண்ட நபர் ஊடகத்தினரிடம், ‘நான் தான் இதை செய்தேன். இது எனது முடிவு. அந்த வீரரை சேர்த்தது எனது முடிவு தான் என்றெல்லாம் கூறினார். எது எப்படி என்றாலும் களத்தில் வெற்றிக்கு நான் என்ன முடிவு எடுத்தேன் என்பது எனக்கு தெரியும். ஒரு போதும் என்னை நானே பாராட்டிக்கொள்வது கிடையாது. ஆனால் அங்கு என்ன செய்தேன் என்பது தெரியும்’ என்றார்.

Next Story