வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் ஆவலில் இந்தியா


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் ஆவலில் இந்தியா
x
தினத்தந்தி 17 Feb 2022 8:46 PM GMT (Updated: 17 Feb 2022 8:46 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 2-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

20 ஓவர் கிரிக்கெட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை இந்தியா 7 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. கேப்டன் ரோகித்சர்மா (40 ரன்), இஷான் கிஷன் (35 ரன்), சூர்யகுமார் யாதவ் (34 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்தனர். பந்து வீச்சில், புதுமுக சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியதுடன் ஆட்டநாயகனாக ஜொலித்தார். இந்த ஆட்டத்தில், பொல்லார்ட் அடித்த வலுவான ஷாட்டை தடுக்க முயற்சித்த போது வலது கையில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு அனேகமாக ஓய்வு அளிக்கப்படலாம்.

முதல் ஆட்டத்தில் சேர்க்கப்படாத ஸ்ரேயாஸ் அய்யருக்கு இன்றைய ஆட்டத்திலும் இடம் கிடைப்பது சந்தேகம் தான். ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரரை வெளியில் உட்கார வைப்பது கடினமான முடிவு. ஆனால் ஆல்-ரவுண்டர் ஒருவர் தேவை என்பதால் அவரை சேர்க்க முடியவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்தார். மற்றபடி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டு தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய படை தயாராக உள்ளது.

தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீசை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் (61 ரன்) கைல் மேயர்ஸ் (31 ரன்) ஆகியோர் அதிரடி காட்டினர். ஆனால் மிடில் வரிசையில் தடுமாறினர். ‘6 முதல் 15 ஓவர்களில் 49 ரன் மட்டுமே எடுத்தோம். இந்த சமயத்தில் இன்னும் 18-20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும். இதே போல் ரன் எடுக்காமல் அதிகமான பந்துகளை விரயம் (டாட் பால்) செய்வதை தடுப்பதில் முன்னேற்றம் தேவை’ என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் குறிப்பிட்டார். பயிற்சியின் போது பந்து நெஞ்சில் தாக்கியதால் லேசான காயமடைந்த ஆல்-ரவுண்டர் ஜாசன் ஹோல்டருக்கு முன்னெச்சரிக்கையாக ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவர் இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார் என்று தெரிகிறது.

தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் கடும் போராட்டம் அளிப்பார்கள் என்று நம்பலாம். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளிநாட்டில் கடைசியாக ஆடிய 12 இருபது ஓவர் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த சோகத்துக்கும் முடிவு கட்ட முயற்சிப்பார்கள் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

இரவு 7 மணிக்கு...

இங்கு இரவில் போக போக பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனால் 2-வது பவுலிங் செய்யும் போது பந்தை சரியாக பிடித்து வீசுவதில் சிரமம் இருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது. ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்யும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர் அல்லது ஷர்துல் தாக்குர்.

வெஸ்ட் இண்டீஸ்: பிரான்டன் கிங், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ரோமன் பவெல், பொல்லார்ட் (கேப்டன்), ஒடியன் சுமித், பாபியன் ஆலென், ரொமாரியா ஷெப்பர்டு, அகேல் ஹூசைன் அல்லது ஜாசன் ஹோல்டர், ஷெல்டன் காட்ரெல்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story