இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி


இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி
x
தினத்தந்தி 19 Feb 2022 12:02 AM GMT (Updated: 2022-02-19T05:32:29+05:30)

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தது.

இந்தியா - நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நேற்று நடந்தது. இதில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 49.3 ஓவர்களில் 279 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது. மேகனா (61 ரன்), ஷபாலி வர்மா (51 ரன்), தீப்தி ஷர்மா (69 ரன்) ஆகிேயாா் அரைசதம் அடித்தனர். கேப்டன் மிதாலிராஜ் (23 ரன்), ஹர்மன்பிரீத் கவுர் (19 ரன்) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 49.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஒரு கட்டத்தில் 171 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்த நிலையில் லாரன் டவுன் (64 ரன்கள், 52 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) நிலைத்து நின்று தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விரட்டிப்பிடித்த (சேசிங்) 2-வது அதிகபட்ச இலக்கு இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.


Next Story