வளரும் கிரிக்கெட் வீரரின் சிகிச்சைக்கு ரூ.31 லட்சம் வழங்கிய கேஎல் ராகுல்


வளரும் கிரிக்கெட் வீரரின் சிகிச்சைக்கு ரூ.31 லட்சம் வழங்கிய  கேஎல் ராகுல்
x
தினத்தந்தி 22 Feb 2022 3:42 PM GMT (Updated: 2022-02-22T21:12:44+05:30)

வளரும் கிரிக்கெட் வீரர் ஒருவரின் சிகிச்சைக்காக கேஎல் ராகுல் ரூ.31 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி ஆட்டக்காரர் கே.எல். ராகுல். இவர்  வளரும் கிரிக்கெட் வீரர் ஒருவரின் சிகிச்சைக்காக கேஎல் ராகுல் ரூ.31 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் மும்பையை சேர்ந்த வரத் நலவாடே என்ற ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவன் அபூர்வ ரத்தக் கோளாறான அப்லாஸ்டிக் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டு, மும்பையின் ஜஸ்லோக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். வரத்தின் இரத்த பிளேட்லெட் அளவுகள் மிகவும் குறைவாக இருந்ததால், அவரது நோயெதிர்ப்பு அமைப்பு நோய்த்தொற்றுகளுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. சாதாரண காய்ச்சல் கூட குணமாக பல மாதங்கள் ஆகும். இதனால் அவனுக்கு அவசமாக சிகிச்சை தேவைப்பட்டது. அவனுக்கு அவசர எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (பிஎம்டி) தேவைப்பட்டதால், அவனது தாய் மற்றும் தந்தை இருவரும் இணைந்து சிகிச்சைக்காகத் தேவையான ரூ.35 லட்சத்தை திரட்ட முடியாமல் திணறினர். 

இந்த நிலையில், இதுபற்றி தகவல் அறிந்த கே.எல். ராகுல் அச்சிறுவனின் சிகிச்சைக்காக ரூ.31 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். வரத் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இப்போது குணமடைந்து வருகிறார்.

நன்கொடையைப் பற்றி பேசிய ராகுல், “வரத்தின் உடல்நிலை குறித்து நான் அறிந்ததும், எனது குழு கிவ்இந்தியாவுடன் தொடர்பு கொண்டது, அதனால் எங்களால் அவனுக்கு உதவமுடிந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், அவர் நன்றாக இருக்கிறார். வரத் விரைவில் நலமுடன் திரும்பிஅவரது கனவுகளை அடைவார் என்று நம்புகிறேன். எனது பங்களிப்பு மேலும் மக்கள் முன்வரவும் அவர்களுக்கு உதவவும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன். ," என்று அவர் மேலும் கூறினார்.

இதுகுறித்து வரத்தின் பெற்றோர் கூறுகையில்,  எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாட விரும்புவதாக வரத் அடிக்கடி குறிப்பிட்டு வந்தான். “வரத்தின் அறுவை சிகிச்சைக்காக இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கிய கே.எல்.ராகுலுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அவர் இல்லையேல் எங்களால் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை இவ்வளவு குறுகிய காலத்தில் மேற்கொள்ள இயலாது. ராகுலின் இந்த செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


Next Story