பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 March 2022 12:18 AM GMT (Updated: 2022-03-15T05:48:12+05:30)

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியை நாளை எதிர்கொள்கிறது.

மவுன்ட் மாங்கானு, 

நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (புதன்கிழமை) மவுன்ட் மாங்கானுவில் உள்ள பே ஓவல் மதானத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் பணிந்தது.

அடுத்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் குவித்ததுடன், 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இந்திய தொடக்க வீராங்கனை மந்தனா (123 ரன்கள்), துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (109 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் சினே ராணா 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர்கள் மேக்னா சிங் 2 விக்கெட்டும், ஜூலன் கோஸ்வாமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தி கலக்கியதுடன் வெஸ்ட்இண்டீசை 162 ரன்னுக்குள் சுருட்டினர். 

அந்த வெற்றி உத்வேகத்துடன் இந்திய அணி இந்த ஆட்டத்தில் களம் காண உள்ளது. ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்து மோசமான நிலையில் உள்ளது. 

தொடர்ச்சியான தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப இங்கிலாந்து அணி போராடும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story