ஐ.பி.எல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?


ஐ.பி.எல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?
x
தினத்தந்தி 7 May 2022 10:06 PM GMT (Updated: 2022-05-08T03:36:58+05:30)

இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 6 வெற்றி, 5 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் இருக்கிறது.

முதல் 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றிருந்த முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி அதன் பிறகு குஜராத், சென்னை, டெல்லி அணிகளிடம் வரிசையாக தோல்வியை தழுவியது. வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கும் அந்த அணியில் கேப்டன் வில்லியம்சனின் அவுட்-ஆப் பார்ம் கவலைக்குரிய அம்சமாக உள்ளது. 10 ஆட்டங்களில் 199 ரன்களே (ஸ்டிரைக் ரேட் 96.13) எடுத்துள்ளார். இந்த சீசனில் குறைந்தது 150 பந்துகளுக்கு மேல் சந்தித்த பேட்ஸ்மேன்களில் மோசமான ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பது வில்லியம்சன் தான். அவர் பழைய நிலைக்கு திரும்ப தீவிரமாக முயற்சிப்பார். அதே சமயம் நிகோலஸ் பூரன், மார்க்ராம் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன் காயத்தால் அவதிப்படுவது அந்த அணிக்கு இன்னொரு சறுக்கலாகும். ‘புயல்வேக பவுலர்’ உம்ரான் மாலிக் முந்தைய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மணிக்கு அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் 52 ரன்களை அள்ளி கொடுத்தார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. அதனால் அவர் பந்து வீச்சில் சில மாற்றங்களை கொண்டு வரலாம். எது எப்படியோ ஏற்கனவே பெங்களூருவை வெறும் 68 ரன்னில் சுருட்டி ‘மெகா’ வெற்றி பெற்றிருப்பதால் ஐதராபாத் அணியினர் கூடுதல் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைப்பார்கள்.

இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 6 வெற்றி, 5 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் இருக்கிறது. புள்ளி பட்டியலில் டாப்-4 இடத்துக்குள் தங்களை திடமாக நிலை நிறுத்த இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது பெங்களூருவுக்கு கட்டாயமாகும். இதில் தோற்றால் ‘பிளே-ஆப்’ வாய்ப்பு சிக்கலாகும். கடந்த ஆட்டத்தில் சென்னையை 13 ரன்னில் தோற்கடித்த அந்த அணியில் நட்சத்திர பட்டாளங்களுக்கு குறைவில்லை. ஆனால் விராட் கோலியின் (10 ஆட்டத்தில் 216 ரன்) தடுமாற்றம் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இந்த முறை சுழற்பந்து வீச்சில் அதிகமாக திணறும் அவர் மீண்டும் ரன்மழை பொழிவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பந்து வீச்சில் ஹேசில்வுட், ஹர்ஷல் பட்டேல் நன்றாக பந்து வீசுகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா கணிசமாக விக்கெட் வீழ்த்தியிருந்தாலும், இந்த தொடரில் அதிக சிக்சர்களை (23 சிக்சர்) வாரி வழங்கிய வள்ளலாகவும் அறியப்படுகிறார்.

மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஐதராபாத்திடம் ஏற்கனவே உதை வாங்கிய பெங்களூரு அணி அதற்கு சுடச்சுட பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Next Story