மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டி.ஆர்.எஸ். இல்லாமல்போனது பாதகத்தை ஏற்படுத்தியது - பிளமிங்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 May 2022 11:19 PM GMT (Updated: 2022-05-14T04:49:53+05:30)

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டி.ஆர்.எஸ். இல்லாமல்போனது பாதகத்தை ஏற்படுத்தியதாக சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை, 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. முதலில் பேட் செய்த சென்னையை 97 ரன்னில் சுருட்டிய மும்பை அணி அந்த இலக்கை 14.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 

இந்த தோல்வியின் மூலம் சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆனது. இந்த ஆட்டத்தில் முதல் 10 பந்துகள் வரை டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் (நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை) வேலை செய்யவில்லை. மைதானத்தில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டது. அதன் பிறகு டி.ஆர்.எஸ். முறை பயன்பாட்டுக்கு வந்தது. முதல் ஓவரில் டிவான் கான்வேவும் (0), 2-வது ஓவரின் 4-வது பந்தில் ராபின் உத்தப்பாவும் (1 ரன்) எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டம் இழந்தனர். டி.ஆர்.எஸ்.முறையில் அப்பீல் செய்ய முடிந்து இருந்தால் டிவான் கான்வே அவுட்டில் இருந்து தப்பி இருப்பார். சற்று நேரம் டி.ஆர்.எஸ். இல்லாதது சென்னை அணியின் அதிர்ச்சி தொடக்கத்துக்கு வித்திட்டது.

இது குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், ‘அந்த நேரத்தில் டி.ஆர்.எஸ். முறை இல்லாமல் போனது சற்று துரதிருஷ்டவசமானதாகும். இதனால் நாங்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தோம். ஆனால் இது விளையாட்டில் ஒரு அங்கமாகும். தொடக்கத்தில் டி.ஆர்.எஸ். இல்லாதது எங்களுக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வழிவகுத்தது. இருப்பினும் நாங்கள் இன்னும் நன்றாக பேட்டிங் செய்து இருக்க வேண்டும். நிச்சயமாக நாங்கள் நல்ல தொடக்கம் காணவில்லை’ என்றார்.

தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கருத்து தெரிவிக்கையில், ‘ஆடுகளம் எந்த மாதிரி இருந்தாலும் 130-க்கு குறைவாக ரன் எடுத்தால் அதற்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது என்பது கடினம். ஆட்டத்தின் முடிவை பற்றி சிந்திக்காமல் எதிரணியினருக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்து வீசுங்கள் என்று பந்து வீச்சாளர்களிடம் நான் தெரிவித்தேன். இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரும் (முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங்) சிறப்பாக பந்து வீசினார்கள். இதுபோன்ற ஆட்டங்கள் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும். அத்துடன் அவர்களின் சிறப்பான செயல்பாடு எங்கள் அணிக்கு நல்ல அறிகுறியாகும். மும்பை அணி சிறப்பாக பந்து வீசியது’ என்றார்.

Next Story