டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் 2 வீரர்கள் சேர்ப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 May 2022 11:35 PM GMT (Updated: 2022-05-14T05:05:06+05:30)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் 2 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை, 

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 23-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை நெல்லை, கோவை, சேலம், நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடக்கிறது. நெல்லையில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் வீரர்கள் தக்கவைப்பு ஏற்கனவே முடிந்து விட்டது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான வீரர்கள் ஒதுக்கீடு சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. அணிகளால் மொத்தம் 47 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நெல்லை ராயல் கிங்ஸ் அதிகபட்சமாக 10 வீரர்களை தன்வசப்படுத்தியது.

இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான எஸ்.கார்த்திக் (சென்னை), எஸ்.மதன்குமார் (விளாத்திகுளம்) ஆகியோரை தங்கள் அணிக்கு தேர்வு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அலெக்சாண்டர், ஹரிஷ்குமார், என்.ஜெகதீசன், சாய் கிஷோர், ஆர்.சதீஷ், கவுசிக் காந்தி உள்பட 20 வீரர்களை ஏற்கனவே தக்கவைத்து இருந்தது.

கோவை கிங்ஸ் அணி சூர்யா, அபினவ், ராஜா, ராம் அரவிந்த், ஈஸ்வர் சுரேசையும், திருப்பூர் தமிழன்ஸ் அணி சுரேஷ் குமார், ஆனந்த் சுப்பிரமணியன், அபிஷேக் ஹேக்டே, சந்திரசேகர், ஷருன்குமார், பார்த்தசாரதியையும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோனிஷ் சதீஷ், அந்திமணி கங்கா பிரதீப், மனோஜ்குமார், முகுந்த், கார்த்திக் சரணையும், மதுரை பாந்தர்ஸ் அணி சன்னி சந்து, தலைவன் சற்குணம், ரித்திக் ஈஸ்வரன், விக்னேஷ், ஆயுஷ்சையும், திருச்சி வாரியர்ஸ் அணி அஜய் கிருஷ்ணா, ஆதிக் உர் ரஹ்மான், சுகேந்திரன், சஞ்சய், கோகுல்மூர்த்தி, பூபதி வைஷ்ண குமார், ஜஸ்பர் பெஞ்சமினையும், நெல்லை ராயல் கிங்ஸ் அணி அஜிதேஷ், சுனில் சாம், கிரிஷ் ஜெயின், ஈஸ்வரன், ரூபன் ராஜ், கார்த்திக், மணிகண்டன், ரோஹன் ராஜூ, விக்ரம் ஜாங்கிட், ஆகாஷ் தேவ் குமார், சதீஷ் குமாரையும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ஜாபர் ஜமால், கவின், கணேஷ், தினேஷ் வேதகுரு, ஜீத் ஜெயின், காமேஷ், ரிஷியையும் தேர்வு செய்து இருக்கிறது.


Next Story