2024 டி20 உலகக்கோப்பை ஜூன் 4ம் தேதி தொடங்க வாய்ப்பு...!


2024 டி20 உலகக்கோப்பை ஜூன் 4ம் தேதி தொடங்க வாய்ப்பு...!
x

Image Courtesy: TWITTER

2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளன.

வாஷிங்டன்,

டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அந்த தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

இந்நிலையில் 9வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள 8 இடங்களை தேர்வு செய்ய நடைபெற்று வரும் தகுதி சுற்று ஆட்டங்களில் இதுவரை ஸ்காட்லாந்து, அயர்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 5 இடங்களுக்கு தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பை ஜூன் மாதம் 4ந்தேதி தொடங்கி ஜூன் 30ந்தேதி முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் சுற்றுக்கு தகுதி பெறும் 20 அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர் 8 சுற்றில் தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் மோதும். அதிலிருந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும்.


Next Story