2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்


2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்
x

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

டப்ளின்,

இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று முன்தினம் நடந்தது. 'டாஸ்' ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கும் முன்பே மழை குறுக்கிட்டதால் 2 மணி நேரம் தாமதமாக ஆரம்பமானது. அத்துடன் போட்டி 12 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. கேப்டன் ஆன்டி பால்பிர்னி (0), பால் ஸ்டிர்லிங் 4 ரன்னிலும், காரெத் டெலானி 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 22 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (3.5 ஓவர்களில்) இழந்து தத்தளித்தது. 4-வது வீரராக களம் கண்ட ஹாரி டெக்டர் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோர் மூன்று இலக்கத்தை எட்ட வழிவகுத்தார். அவருடன் இணைந்த விக்கெட் கீப்பர் லார்கான் டக்கர் 18 ரன்னில் யுஸ்வேந்திர சாஹல் சுழலில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. ஹாரி டெக்டர் 64 ரன்களுடனும் (33 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஜார்ஜ் டாக்ரெல் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தீபக் ஹூடா, இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினார்கள். காலில் லேசான தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வரிசையில் களம் காணவில்லை. அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 11பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 26 ரன் எடுத்த நிலையில் கிரேக் யங் பந்து வீச்சில் போல்டு ஆனார். அவர் அடுத்த பந்தில் சூர்யகுமார் யாதவ் (0) விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா தன் பங்குக்கு 24 ரன்கள் (12 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) சேர்த்து ஜோஷ் லிட்டில் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

9.2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தீபக் ஹூடா 47 ரன்னும் (29 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 5 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். 11 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருது பெற்றார். அறிமுக வீரராக இடம் பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஒரு ஓவர் வீசி 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

அயர்லாந்துக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் இதுவரை 4 முறை மோதி இருக்கும் இந்திய அணி அந்த 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. அந்த வெற்றியை தொடருவதுடன் தொடரை கைப்பற்றவும் இந்திய அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி ஆறுதல் வெற்றியை பெற அயர்லாந்து அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவு இருக்காது.

இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3, சோனி டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story