ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி 'திரில்' வெற்றி


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி திரில் வெற்றி
x

image courtesy: Pakistan Cricket twitter

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹம்பன்டோட்டா,

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாவில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாசும், இப்ராகிம் ஜட்ரனும் வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்தனர். 39 ஓவர்கள் வரை இந்த கூட்டணியை அசைக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய குர்பாஸ் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் (39.5 ஓவர்) திரட்டி பிரிந்தனர். இப்ராகிம் ஜட்ரன் 80 ரன்னில் கேட்ச் ஆனார். ரமனுல்லா குர்பாஸ் 151 ரன்கள் (151 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசியதோடு, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர் டோனி 148 ரன் (2005-ம் ஆண்டு) எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

கடைசி கட்டத்தில் முகமது நபி (29 ரன்), கேப்டன் ஷகிடி (15 ரன்) ஆகியோர் ஸ்கோர் 300-ஐ எட்ட உதவினர். 50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 300 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து 301 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியில் டாப்-3 வீரர்களான பஹர் ஜமான் (30 ரன்), இமாம் உல்-ஹக் (91 ரன்), கேப்டன் பாபர் அசாம் (53 ரன்) கணிசமான பங்களிப்பை வழங்கினர். அவர்களுக்கு பிறகு மிடில் வரிசை வீரர்கள் தடுமாறிய போதும் ஷதப் கான் நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்ட போது, ஷதப்கான் (48 ரன், 35 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இதன் பின்னர் நசீம் ஷாவும் (10 ரன்), ஹாரிஸ் ரவுப்பும் (3 ரன்) ஒரு பந்து மீதம் வைத்து 'திரில்' வெற்றியை தேடித்தந்தனர்.

பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 24 வைடு உள்பட எக்ஸ்டிரா வகையில் 30 ரன்களை வாரி வழங்கியது ஆப்கானிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.


Next Story