2வது டி20 போட்டி : பதிலடி கொடுக்குமா இந்தியா ? நியூசிலாந்து அணியுடன் நாளை மோதல்
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது போட்டி நாளை லக்னோவில் நடைபெறுகிறது.
லக்னோ,
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் தொடரையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது போட்டி நாளை லக்னோவில் நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி களம் காண்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது.