வங்காளதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் : இலங்கை அணி சிறப்பான தொடக்கம்


வங்காளதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் : இலங்கை அணி சிறப்பான தொடக்கம்
x

Image Courtesy : ICC 

வங்காளதேசதிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

மிர்பூர்,

வங்காளதேசதிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையில் சட்டோகிராமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-வது டெஸ்ட் மிர்பூரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்கத்திலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க வீரர்கள் ஹசன் ஜாய் மற்றும் தமீம் இக்பால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து வங்காளதேச அணி மீள்வதற்குள் அடுத்து வந்த ஹொசைன் சாண்டோ 8 ரன்களிலும், மொமினுல் ஹக் 9 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் கடந்த போட்டியில் சதம் அடித்த முஷ்பிகுர் ரஹீம் உடன் லிட்டன் தாஸ் இணைந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர்.

இருவரும் சதம் அடித்து அசத்தினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.. லிட்டன் தாஸ் 135 ரன்களிலும் , முஷ்பிகுர் ரஹீம் 115 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். தொடர்ந்து இன்று 2 வது நாள் ஆட்டம் நடைபெற்றது .

சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் 141 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .மறுபுறம் முஷ்பிகுர் ரஹீம் நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் வங்காளதேச அணி 10 விக்கெட்டுக்களை இழந்து 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .அந்த அணியில் முஷ்பிகுர் ரஹீம் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் .

பின்னர் இலங்கை அணி தனது முதல் இன்னிங்க்சில் விளையாடியது .தொடக்க வீரர்களாக ஒசடா பெர்னான்டோ , கேப்டன் திமுத் கருணரத்னே களமிறங்கினார் .

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர்.அரைசதம் அடித்த ஒசடா பெர்னான்டோ 57 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த குசால் மெண்டிஸ்11 ரன்களில் ஆட்டமிழந்தார் .

மறுபுறம் சிறப்பாக விளையாடிய கருணாரத்னே அரைசதம் அடித்தார் .இதனால் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.கருணாரத்னே 70ரன்களும் ,கசுன் ரஞ்சித ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.


Next Story