பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்; இலங்கை அணி 166 ரன்களில் ஆல்அவுட்


பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்; இலங்கை அணி 166 ரன்களில் ஆல்அவுட்
x

image courtesy; twitter/@ICC

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 166 ரன்களில் ஆல்அவுட் ஆகியுள்ளது.

கொழும்பு,

இலங்கைக்குச் சென்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இலங்கை அணி வீரர்கள் நிசன் மதுஷ்கா மற்றும் கருணாரத்னே தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் நிசன் மதுஷ்கா 4 ரன்களிலும், கருணாரத்னே17 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இதனையடுத்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 6 ரன்களிலும், மேத்யூஸ் 9 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி நெருக்கடிக்குள்ளானது.

நெருக்கடியில் தவித்த இலங்கை அணியை தினேஷ் சண்டிமால்-தனஞ்சயா டி சில்வா இணை சரிவிலிருந்து மீட்க போராடினர். அதில் தினேஷ் சண்டிமால் 37 ரன்களில் அவுட் ஆனார். மறுபுறம் அரைசதம் அடித்த சில்வா 57 ரன்களில் அப்ரார் அகமது பந்து வீச்சில் வீழ்ந்தார். அதன்பின் களம் இறங்கிய வீரர்களில் ரமேஷ் மெண்டிஸ் தவிர மற்ற வீரர்கள் விரைவில் அவுட் ஆகினர். அவர் 27 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

முடிவில் இலங்கை அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளும்,நசீம் ஷா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


Next Story