2வது டெஸ்ட் : பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி


2வது டெஸ்ட் : பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி
x

Image Courtesy : ICC Twitter 

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1என சம நிலையில் முடிந்தது.

காலே,

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான காலேயில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 378 ரன்களும், பாகிஸ்தான் 231 ரன்களும் எடுத்தன. 147 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை 3-வதுநாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்னுடனும், கேப்டன் திமுத் கருணாரத்னே 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 360 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தனது 9-வது சதத்தை எட்டிய தனஞ்ஜெயா டி சில்வா 109 ரன்களில் (171 பந்து, 16 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். கேப்டன் கருணாரத்னே 61 ரன்களும், ரமேஷ் மென்டிஸ் 45 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 508 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதுவரை யாரும் எட்டிராத இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 28 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது, மழை மேகம் திரண்டு போதிய வெளிச்சம் இல்லாத சூழல் உருவாகியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மோசமான வானிலை நிலவியதால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக 26 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இமாம் உல்-ஹக் 46 ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்..

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்ததது இமாம் உல் ஹக் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த முகமது ரிஸ்வான் பாபர் அசாமுடன் இணைந்து சிறப்பாக விளையாடினர்.நிலைத்து ஆடிய பாபர் அசாம் அரைசதம் அடித்தார்.மறுபுறம் ரிஸ்வான் 37 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் வந்த வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 77 ஓவர்களில் 261 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்தது.இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் 246 ரன்கள் வித்தியாசத்தில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1என சம நிலையில் முடிந்தது.


Next Story