நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணி 164 ரன்னில் ஆல்-அவுட்


நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணி 164 ரன்னில் ஆல்-அவுட்
x

image courtesy: BLACKCAPS twitter

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 164 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது.

வெலிங்டன்,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ் ஆகியோரது இரட்டை சதத்தால் 4 விக்கெட்டுக்கு 580 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 26 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 164 ரன்னில் சுருண்டு 'பாலோ-ஆன்' ஆனது. அதிகபட்சமாக கேப்டன் திமுத் கருணாரத்னே 89 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 'பாலோ-ஆன்' பெற்ற இலங்கை 416 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. நேற்றைய முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கருணாரத்னே (51 ரன்), குசல் மென்டிஸ் (50 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இலங்கைக்கு இன்னும் 303 ரன் தேவைப்படுவதால் இந்த டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.


Next Story