ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி - இலங்கை அணி வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி - இலங்கை அணி வெற்றி
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

கொழும்பு,

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 34 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன் பிறகு தனஞ்ஜெயா டி சில்வாவும், சரித் அசலங்காவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் சவாலான ஸ்கோரை எட்டவும் உதவினர். டி சில்வா 60 ரன்களில் வெளியேறினார். தனது முதலாவது சதத்தை ருசித்த அசலங்கா 110 ரன்களில் (106 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். முடிவில் இலங்கை அணி 49 ஓவர்களில் 258 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

அடுத்து 259 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் போராட, இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் வீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். ஒரு ரன்னில் தனது 19-வது சதத்தை கோட்டை விட்ட வார்னர் 99 ரன்களில் ( 112 பந்து, 12 பவுண்டரி) தனஞ்ஜெயா டி சில்வாவின் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் (35 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட போது, அதை எதிர்கொண்ட குணேமேன் (15 ரன்) தூக்கியடித்து கேட்ச் ஆகிப்போனார். 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 254 ரன்களுக்கு அடங்கியது. இலங்கை அணி 4 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை சுவைத்தது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2010-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இலங்கை வெல்வது இதுவே முதல் முறையாகும். இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story