ஒரே ஓவரில் 6 விக்கெட்; ஆஸ்திரேலிய கிளப் பவுலர் சாதனை!
காரேத் மோர்கன், முட்ஜீரபா நேரங் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில், உள்ளூர் கிரிக்கெட் ஒன்றில் ஒரு பவுலர், ஓவரின் 6 பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி அபூர்வ சாதனை படைத்துள்ளார். கோல்டு கோஸ்ட் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் டிவிசன் 3-ல் சர்பெர்ஸ் பாரடைஸ்- முட்ஜீரபா நேரங் கிளப் அணிகள் மோதின. இதில் 179 ரன் இலக்கை நோக்கி ஆடிய பாரடைஸ் அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன் தேவை என்ற நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன.
இறுதி ஓவரை முட்ஜீரபா நேரங் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான காரேத் மோர்கன் வீசினார். அவரது சுழலில் 6 வீரர்களும் ஒட்டுமொத்தமாக சிக்கினர். இதில் 4 வீரர்கள் கேட்ச் ஆனார்கள். 2 வீரர்கள் போல்டானார்கள். இதன் மூலம் முட்ஜீரபா நேரங் அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில்லிங்கான வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் மோர்கன் 7 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர் நீல் வாக்னர், வங்காளதேச வீரர் அல்-அமின் ஹொசைன், இந்தியாவின் அபிமன்யூ மிதுன் ஆகியோர் ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.