வெற்றியை தொடரும் முனைப்பில் ஆஸ்திரேலியா..!! நெதர்லாந்துடன் இன்று மோதல்


வெற்றியை தொடரும் முனைப்பில் ஆஸ்திரேலியா..!! நெதர்லாந்துடன் இன்று மோதல்
x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைப்பெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

புதுடெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் தொடரில் இன்று நடைப்பெறும் ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா நெதர்லாந்தை சந்திக்க உள்ளது. முதல் 2 ஆட்டங்களில் தோற்ற ஆஸ்திரேலியா அதன் பிறகு இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி எழுச்சி பெற்றது. இனி ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆஸ்திரேலிய அணியினர் ஆடுவார்கள்.

கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்துள்ள டிராவிஸ் ஹெட் சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. அவர் இடம் பிடித்தால் லபுஸ்சேன் வெளியே உட்கார வைக்கப்படுவார். மற்றபடி நெதர்லாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி 3-வது வெற்றியை பெறும் வேட்கையுடன் ஆயத்தமாக உள்ளனர்.

இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள நெதர்லாந்து 3-ல் தோல்வியும், ஒன்றில் வெற்றியும் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) கண்டுள்ளது. கடைசி இரு ஆட்டங்களில் நன்றாக ஆடியிருப்பதால் அதிக நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். முடிந்த வரை ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால் அளிக்க முயற்சிப்பார்கள். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ரன்குவிப்பை எதிர்பார்க்கலாம்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்1)


Next Story