பந்துவீச்சில் ஜொலித்த சென்னை..! மும்பை அணி 139 ரன்கள் சேர்ப்பு
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது.
சென்னை,
16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் சென்னையில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் களம் இறங்குகிறது. அதே வேளையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ் தோனி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி முதலில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீனும் , இஷான் கிஷனும் களமிறங்கினர். கிரீன் 6 ரன்னிலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார்.
இதனால், மும்பை அணி தொடக்கத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. இதனை தொடர்ந்து நிஹால் வதேராவும், சூரியகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சூர்யகுமார் யாதவு 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
நிதானமாக விளையாடிய வதேரா, அரைசதம்கடந்தார். அவர் 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியில் மிரட்டி வந்த டிம் டேவிட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சென்னை பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், மும்பை பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க திணறினர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் தீக்ஷனா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபக் சாகர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதனை தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.