உலகக் கோப்பை கிரிக்கெட்: 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி..!


உலகக் கோப்பை கிரிக்கெட்: 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
x

image courtesy: ICC twitter

தினத்தந்தி 25 Oct 2023 9:00 PM IST (Updated: 25 Oct 2023 9:03 PM IST)
t-max-icont-min-icon

நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

புதுடெல்லி,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து, டேவிட் வார்னர், மார்ஷ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மார்ஷ் 9 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பொறுப்புடன் ஆடிய ஸ்மித் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த லபுஷேன் 62 ரன்னிலும், ஜோஷ் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். ஆனால், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 93 பந்தில் 104 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்துவந்த மேக்ஸ்வெல் நெதர்லாந்து பந்துவீச்சை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டார். அவர் 40 பந்துகளில் சதம் விளாசினார். இறுதியில் 44 பந்துகளில் 106 ரன்கள் விளாசிய மேக்ஸ்வெல் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 21 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்த போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.


Next Story