உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை,
ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.
இதில் மிட்செல் மார்ஷ் ரன் ஏதுமின்றி கேட்ச் ஆகி வெளியேறினார். டேவிட் வார்னர் 41 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆனார். மார்ன்ஸ் லபுஷேன் 27 ரன்களிலும், மேக்ஸ்வெல் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் ரன் ஏதுமின்றி அவுட்டாகி வெளியேறினர்.
ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன்(0) கேட்ச் ஆனார். ஹேசில்வுட் வீசிய 2-வது ஓவரில் ரோகித் சர்மா(0) எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்(0) அதே ஓவரில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி-கே.எல்.ராகுல் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. நிதானமாக விளையாடிய இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 26 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
தொடந்து விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதையடுத்து விராட் கோலி 85 ரன்களில் அவுட் ஆன நிலையில், கே.எல்.ராகுல் 97 ரன்கள் விளாசி இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார். இறுதியில் இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.