உலகக் கோப்பை கிரிக்கெட்: சென்னையில் இன்று நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதல்


உலகக் கோப்பை கிரிக்கெட்: சென்னையில் இன்று நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதல்
x

சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

சென்னை,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் சென்னையில் நடைபெறும் 2-வது போட்டி இதுவாகும்.

நியூசிலாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், அடுத்த ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்தது. தொடர்ந்து 2 வெற்றியை ருசித்துள்ள அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது.

நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, வில் யங், டாம் லாதமும், பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, பவுல்ட்டும் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஐ.பி.எல். போட்டியின் தொடக்க நாளில் பீல்டிங் செய்த போது கால்முட்டியில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்து முழு உடல் தகுதியை எட்டி இருக்கும் கேப்டன் கேன் வில்லியம்சன் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குகிறார். இதனை அவரே நேற்று உறுதிப்படுத்தினார். 7 மாதங்களுக்கு பிறகு அவர் விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

வில்லியம்சன் கூறுகையில், 'காயத்தில் இருந்து மீண்டு வந்தது ஒரு நீண்ட பயணமாகும். காயத்தில் இருந்து விடுபட்டு உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்ததுடன் இப்போது உங்கள் முன்பாக பேசிக்கொண்டு இருப்பது பரவசம் அளிக்கிறது. டிம் சவுதி காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறார். இருப்பினும் அவர் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் நாளைய (இன்றைய) ஆட்டத்தில் ஆடமாட்டார். இரு அணிகளிலும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று இருப்பதால் அது நாளைய ஆட்டத்தில் முக்கிய பங்குவகிக்கும்.

இந்த உலகக் கோப்பை போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அந்த சூழலுக்கு தகுந்தபடி சீக்கிரமாக மாற்றி கொள்வது தான் எல்லா அணிகளுக்கும் உள்ள மிகப்பெரிய சவாலாகும்' என்றார்.

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக ஆடக்கூடிய வில்லியம்சன் திரும்புவது நியூசிலாந்து அணியின் பேட்டிங்குக்கு கூடுதல் வலுசேர்க்கும்.

ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பதம் பார்த்தது. அடுத்த ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் பணிந்தது. அந்த அணியில் பேட்டிங்கில் லிட்டான் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், நஜ்முல் ஹூசைன் ஷன்டோவும், பந்து வீச்சில் ஷகிப் அல்-ஹசன், மஹிதி ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஷோரிபுல் இஸ்லாமும் நல்ல நிலையில் உள்ளனர்.

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமானதாகும். வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் அல்-ஹசன், மஹிதி ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகிய கூட்டணி கடந்த 2 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 41 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 30-ல் நியூசிலாந்தும், 10-ல் வங்காளதேசமும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பை போட்டி தொடரில் வங்காளதேசத்துக்கு எதிராக 5 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் நியூசிலாந்தே வெற்றி வாகை சூடி இருக்கிறது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

நியூசிலாந்து: டிவான் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன் அல்லது சோதி, டிரென்ட் பவுல்ட்.

வங்காளதேசம்: லிட்டான் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹிம், தவ்ஹித் ஹிரிடாய், மெஹதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான் அல்லது நசும் அகமது.


Next Story