உலகக்கோப்பை கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி.!


உலகக்கோப்பை கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி.!
x

image credit: @cricbuzz

இலங்கை அணி 25.4 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும்.

இந்த கிரிக்கெட் திருவிழாவில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேட்ஸ்டோவும், டேவிட் மலனும் களமிறங்கினர்.

இந்த ஜோடி, அணிக்கு ஓரளவு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. டேவிட் மலன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 30 ரன்களில் அவுட்டானார். அடுத்துவந்த ஜோ ரூட், 3 ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

குறிப்பாக இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துகளை வீசினர். இலங்கையின் பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாடினர். அத்துடன் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.

ஒருபுறம் பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் 8 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 1 ரன்னிலும், மொயீன் அலி 15 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறிதுநேரம் போராடிய ஸ்டோக்ஸ், 43 ரன்கள் எடுத்த நிலையில், கேட்சாகி ஆட்டமிழந்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 33.2 ஓவர்கள் மட்டுமே எதிர்கொண்டு 156 ரன்கள் எடுத்த நிலையில், ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லகிரு குமாரா 3 விக்கெட்டுகளையும், ரஜிதா மற்றும் அனுபவ வீரர் மேத்யூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஷாங்காவும், குசல் பெரேராவும் களமிறங்கினர்.

குசல் பெரேரா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் குசல் மெண்டிஸ் 11 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்சாகி அவுட்டானார். எனினும், பதும் நிஷாங்கா- சமரவிக்ரமா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை திரட்டியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் முடியவில்லை.

இறுதியில் இலங்கை அணி 25.4 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. பதும் நிஷாங்கா, 77 ரன்களும், சமரவிக்ரமா 65 ரன்களும் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, அடுத்தடுத்த தோல்விகளால், வெறும் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.


Next Story