உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறல்..!


உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறல்..!
x

AFP

தினத்தந்தி 8 Oct 2023 7:00 PM IST (Updated: 8 Oct 2023 9:55 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது.

சென்னை,

ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.

இதில் மிட்செல் மார்ஷ் ரன் ஏதுமின்றி கேட்ச் ஆகி வெளியேறினார். டேவிட் வார்னர் 41 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆனார். மார்ன்ஸ் லபுஷேன் 27 ரன்களிலும், மேக்ஸ்வெல் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் ரன் ஏதுமின்றி அவுட்டாகி வெளியேறினர்.

ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன்(0) கேட்ச் ஆனார். ஹேசில்வுட் வீசிய 2-வது ஓவரில் ரோகித் சர்மா(0) எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்(0) அதே ஓவரில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார்.

தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வரும் நிலையில், தற்போது விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர்.


Next Story