உலகக் கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை மிரட்டுமா ஆப்கானிஸ்தான்? இன்று மோதல்
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
தர்மசாலா,
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி தர்மசாலாவில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் 3-வது லீக்கில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். பொதுவாக இங்குள்ள ஆடுகளத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபடும். ஆனால் ஐ.பி.எல்.-ல் நடந்த இரு ஆட்டங்களில் ரன்மழை பொழியப்பட்டதால் அத்தகைய ஆடுகளத் தன்மையையே இருஅணியினரும் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த உலகக் கோப்பையிலும் சரி, சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையிலும் சரி ஒரு வெற்றியும் பெறாத ஆப்கானிஸ்தான் அந்த சோகத்துக்கு பரிகாரம் தேட தீவிரம் காட்டும். ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம்ஜட்ரன், ரஷித்கான், முஜீப் ரகுமான் உள்ளிட்டோர் அசத்தினால் இந்த ஏமாற்றத்துக்கு முடிவு கட்டலாம். அதே சமயம் அனுபவமும், இளமையும் கொண்ட வங்காளதேசம் ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்கில் ஆப்கானிஸ்தானை 89 ரன் வித்தியாசத்தில் பந்தாடியது. அத்துடன் கடந்த இரு உலகக் கோப்பையில் தங்களது முதல் ஆட்டத்தில் தோற்றதில்லை. அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் உத்வேகத்துடன் வங்காளதேசம் தயாராகியுள்ளது. இரு அணியினரும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
தொடர்ந்து டெல்லியில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் 4-வது லீக்கில் இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுமே உலகக்கோப்பைக்கு முன்பாக சில முன்னணி வீரர்களை காயத்தால் இழந்துள்ளது. இலங்கை அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சமீரா காயத்தால் விலகினர். தென்ஆப்பிரிக்க அணியில் 'சூறாவளி' பவுலர்கள் அன்ரிச் நோர்டியா, சிசான்டா மகாலா ஒதுங்கினர்.
முன்னாள் சாம்பியனான இலங்கை ஆசிய கிரிக்கெட்டில் அடைந்த படுதோல்வியோடு வந்திருக்கிறது. நிசாங்கா, குசல் மென்டிஸ், அசலங்கா, சமரவிக்ரமா பேட்டிங்கில் நன்றாக ஆடுகிறார்கள். பந்து வீச்சில் வெல்லாலகே, பதிரானா, தீக்ஷனா கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். டெல்லி ஆடுகளம் வேகம் குறைந்தது என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். கேப்டன் பவுமா, டி காக், கிளாசென் சூப்பர் பார்மில் உள்ளனர். இதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் கேஷவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி இங்குள்ள சாதகமான சூழலை பயன்படுத்திக் கொண்டால் தொடரை வெற்றியோடு தொடங்குவதற்கு தென்ஆப்பிரிக்காவுக்கு உதவிகரமாக இருக்கும்.