208 ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; இந்திய கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்


208 ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; இந்திய கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்
x
G.Hersomraja 21 Sep 2022 10:15 PM GMT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் தோற்றதற்கு மோசமான பந்து வீச்சு, பீல்டிங்கே காரணம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

மொகாலி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா 208 ரன்கள் குவித்தும் தோற்றதற்கு மோசமான பந்து வீச்சு, பீல்டிங்கே காரணம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்திய அணி தோல்வி

மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் (55 ரன்), ஹர்திக் பாண்ட்யா (71 ரன்) அரைசதம் நொறுக்கினர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. கேமரூன் கிரீன் 61 ரன்களும் (8 பவுண்டரி, 4 சிக்சர்), மேத்யூ வேட் 45 ரன்களும் (நாட்-அவுட்) விளாசினர்.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி 28 பந்துகளில் 61 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும், ஹர்ஷல் பட்டேலும் இறுதிகட்ட பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கி சொதப்பி விட்டனர்.

ரோகித் கருத்து

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:- எங்களது பந்துவீச்சு மெச்சும்படி இல்லை. 200 ரன்களுக்கு மேலான ரன் எதிரணியை மடக்குவதற்கு நல்ல ஸ்கோராகும். பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது. ஏனெனில் எல்லா நேரமும் 200 ரன்களுக்கு மேல் எடுத்துக் கொண்டிருக்க முடியாது. பேட்டர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் அருமை. அவரது அதிரடியால் தான் இவ்வளவு பெரிய ஸ்கோரை அடைய முடிந்தது. ஆனால் பந்து வீச்சு தான் எதிர்பார்த்தபடி இல்லை. இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இதே போல் பீல்டிங்கிலும் கிடைத்த வாய்ப்புகளை (3 கேட்ச் நழுவியது) பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம்.

மொகாலி, அதிக ரன் குவிக்ககூடிய ஆடுகளம் என்பது தெரியும். இங்கு 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் கூட ரிலாக்சாக இருக்க முடியாது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக ஆடினர். சில ஷாட்டுகள் அசாதாரணமாக இருந்தது.

மேத்யூ வேட்- டிம் டேவிட் ஜோடியில் ஏதாவது ஒரு விக்கெட் எங்களுக்கு தேவைப்பட்டது. அதை எங்களால் செய்ய முடியவில்லை. இந்த ஜோடியை முன்கூட்டியே பிரித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். கிட்டத்தட்ட 32 பந்துகளில் 60 ரன்களுக்கு மேல் திரட்டி விட்டனர். இது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும்.இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

பாண்ட்யா பேட்டி

ஆட்டம் முடிந்த பிறகு நிருபர்களை சந்தித்த இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை நாம் அறிவோம். இப்போது தான் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு வந்திருக்கிறார். நல்ல நிலைக்கு திரும்புவதற்கு அவருக்கு போதுமான அவகாசம் கொடுக்க வேண்டியது முக்கியமாகும். அவருக்கு அதிகமான நெருக்கடி கொடுக்க மாட்டோம். இந்த மாதிரி நிலைமையில் அணியின் பந்து வீச்சு குறித்து கவலை இருக்கத் தான் செய்யும். ஆனால் நமது அணி வீரர்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அணியில் இடம் பெற்றுள்ள 15 பேரும் நாட்டின் மிகச்சிறந்த வீரர்கள். அதனால் தான் அணியில் அங்கம் வகிக்கிறார்கள்.

சமீபத்திய ஆட்டங்களில் நான் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறேன். என்னை பொறுத்தவரை எனக்குரிய நாளாக இருந்தாலும் கூட எப்படி நம்மை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது என்பதில் தான் கவனம் செலுத்துவேன். மற்றபடி எனது செயல்பாடு குறித்து நான் பெரிய அளவில் அலட்டிக் கொள்வதில்லை. இன்றைய நாள் எனக்கு நன்றாக அமைந்தது. அதனால் அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியர்களின் இலக்கு நானாக இருக்கலாம். அதிகமாக சிந்திக்காமல் ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவது அவசியமாகும்' என்றார்.

மேலும் பாண்ட்யா கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் பனிப்பொழிவு எதுவும் இல்லை. எல்லா சிறப்பும் அவர்கள் பேட்டிங் செய்த விதத்தையே சாரும். சிறந்த கிரிக்கெட்டை ஆடினர். பந்து வீச்சில் எங்களது திட்டமிடலை களத்தில் துல்லியமாக செயல்படுத்த இயலவில்லை. எஞ்சிய இரு ஆட்டங்களில் இதை விட சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்' என்றார்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.


Next Story