மெக்ராத் அதிரடி வீண்: 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி


மெக்ராத் அதிரடி வீண்: 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 7 March 2023 11:10 PM IST (Updated: 8 March 2023 12:39 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் உ.பி. வாரியர்சை தோற்கடித்து டெல்லி அணி 2-வது வெற்றி பெற்றது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 5-வது லீக்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மல்லுகட்டின. உ.பி. அணியில் கிரேஸ் ஹாரிசுக்கு பதிலாக சப்னிம் இஸ்மாயில் சேர்க்கப்பட்டார். 'டாஸ்' ஜெயித்த உ.பி. கேப்டன் அலிசா ஹீலே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மெக் லானிங்கும், ஷபாலி வர்மாவும் களம் புகுந்தனர். அதிரடியாக ஆடிய இவர்கள் வலுவான அஸ்திவாரம் உருவாக்கினர். ராஜேஸ்வரி கெய்க்வாட்டின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி துரத்தியடித்தனர். ஸ்கோர் 67-ஐ எட்டிய போது (6.3 ஓவர்) ஷபாலி வர்மா 17 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து மரிஜானே காப் இறங்கினார். மறுமுனையில் ரன்மழை பொழிந்த மெக் லானிங் சிக்சருடன் தொடர்ந்து 2-வது அரைசதத்தை அடித்தார். டெல்லி அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 87 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் 20 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கிய உடனே மரிஜானே காப் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் கேப்டன் மெக்லானிங் 70 ரன்களிலும் (42 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), அலிஸ் கேப்சி 21 ரன்னிலும் வெளியேறினர்.

5-வது விக்கெட்டுக்கு ஜெமிமா ரோட்ரிக்சும், ஜெஸ் ஜோனசெனும் கைகோர்த்து ரன்ரேட்டை சரியவிடாமல் பார்த்துக் கொண்டனர். குறிப்பாக ஜோனசெனின் தடாலடியான பேட்டிங்கால் டெல்லி அணி 200 ரன்களை சிக்கலின்றி கடந்தது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது. ஜோனசென் 42 ரன்களுடனும் (20 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களுடனும் (22 பந்து, 4 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களம் கண்ட உ.பி. வாரியர்ஸ் அணியில் கேப்டன் அலிசா ஹீலே (24 ரன்), அடுத்து வந்த கிரண் நவ்கிரே (2 ரன்) ஆகிய இருவரையும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஸ் ஜோனசென் காலி செய்தார். இந்த சரிவில் இருந்து உ.பி. அணியால் மீள முடியவில்லை. மிடில் வரிசையில் தாலியா மெக்ராத்தின் ரன்வேட்டை தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

20 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் அணியால் 5 விக்கெட்டுக்கு 169 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. தாலியா மெக்ராத் 90 ரன்களுடன் (50 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். டெல்லி தரப்பில் ஜோனசென் 3 விக்கெட் கைப்பற்றினார்.

டெல்லிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே பெங்களூருவை வீழ்த்தி இருந்தது. 2-வது லீக்கில் ஆடிய உ.பி. வாரியர்சுக்கு இது முதலாவது தோல்வியாகும்.


Next Story