ஐதராபாத் அணிக்கு மீண்டும் சோகம் : 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றி..!!
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.
ஐதராபாத்,
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் வார்னர் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் 'டக்' அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார்.
பொறுப்பாக ஆடிய மணீஷ் பாண்டே மற்றும் அக்சர் படேல் தலா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், நடராஜன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் சார்பில் ஹேரி புரூக் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் புரூக் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக மயங்க் அகர்வாலுடன் திரிபாதி ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடியில் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் 49 (39) ரன்களில் கேட்ச் ஆனார்.
அவரைத் தொடர்ந்து திரிபாதி 15 (21) ரன்களும், அபிஷேக் சர்மா 5 ரன்னும், கேப்டன் மார்க்ரம் 3 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கிளாசனுடன், வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். இந்த சூழலில் இந்த ஜோடியில் கிளாசன் 31 (19) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக வாஷிங்டன் சுந்தருடன், ஜான்சன் ஜோடி சேர்ந்தார்.
இறுதியில் ஜான்சன் 2 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 24 (15) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக நோர்ட்ஜ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.