நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி


நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி
x

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

லீட்ஸ்,

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து அணி 329 ரன்னும், இங்கிலாந்து அணி 360 ரன்னும் எடுத்தன. 31 ரன்கள் பின்தங்கிய 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 326 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4-வது நாள் முடிவில் 39 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து இருந்தது. ஆலி போப் 81 ரன்களுடனும், ஜோ ரூட் 55 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து ஆடிய ஆலி போப் 85 ரன்னில் டிம் சவுதி பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட்டுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 54.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் 86 ரன்னுடனும் (125 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்), பேர்ஸ்டோ 71 ரன்னுடனும் (44 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் ஆட்டநாயகன் விருதும், ஜோ ரூட் (இங்கிலாந்து), டேரில் மிட்செல் (நியூசிலாந்து) ஆகியோர் தொடர்நாயகன் விருதும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 3 டெஸ்டிலும் இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி இலக்கை விரட்டிப்பிடித்து (சேசிங்) வியக்க வைத்துள்ளது. முதல் டெஸ்டில் 277 ரன்னையும், 2-வது டெஸ்டில் 299 ரன்னையும் வெற்றிகரமாக சேசிங் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story