உச்சபட்ச பரபரப்பு: நாளை கடைசி நாள் ஆட்டம்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா..?


உச்சபட்ச பரபரப்பு: நாளை கடைசி நாள் ஆட்டம்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா..?
x

Image Courtesy: AFP

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

மும்பை,

ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்தியா சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் இதுவரை 5 விக்கெட் இழப்புக்கு 501ரன்கள் எடுத்துள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இதை வென்றால் மட்டுமே எந்த வித சிக்கலும் இன்றி இறுதிபோட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இந்தியா 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தற்போது நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஆடி வருகிறது.

ஆனால் 4ம் நாள் கிட்டத்தட்ட முடவடையும் தருவாயில் கூட இன்னும் 2 இன்னிங்ஸ் கூட முடிவடையாததால் இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இந்த போட்டி டிராவில் முடிந்தால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிறிது சிக்கல் ஏற்படும்.

அதாவது தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ஒருவேளை இந்தியா வெற்றி பெற்றால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஒருவேளை இந்தியா தோல்வி அடைந்தாலோ அல்லது போட்டி டிராவில் முடிந்தாலோ இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முடிவை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியும் நாளையுடன் முடிவடைகிறது. நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற நியூசிலாந்தின் 9 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். நியூசிலாந்து வெற்றி பெற 90 ஓவர்களில் 257 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் இந்தியாவின் இறுதிப்போட்டி கனவு கலையலாம். நியூசிலாந்து வெற்றி பெற்றால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

அதனால் இந்திய ரசிகர்கள் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை விட இலங்கை -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முடிவை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.



Next Story