கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் முன் விளையாடுவது உற்சாகம் - ஆஸ்திரேலிய பவுலர் மர்பி பேட்டி
கடைசி டெஸ்டில் மெகா ரசிகர்கள் கூட்டம் முன் விளையாட இருப்பது உற்சாகம் அளிப்பதாக ஆஸ்திரேலிய பவுலர் மர்பி கூறியுள்ளார்.
ஆமதாபாத்,
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இது ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது. இதற்கான டிக்கெட் ரூ.200, ரூ.300, ரூ.350, ரூ.1,000, ரூ.2,000 ஆகிய விலைகளில் விற்கப்படுகிறது. முதல் நாள் ஆட்டத்தை காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2013-14-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்டில் ஒரு நாளில் 91,112 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததே அதிகபட்ச எண்ணிக்கையாக உள்ளது. அச்சாதனையை இந்த டெஸ்ட் போட்டி முறியடிக்க வாய்ப்புள்ளது. கூடுதல் சிறப்பாக முதல் நாள் ஆட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் நேரில் பார்க்க உள்ளனர்.
கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்வதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெறுவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. அதே சமயம் முந்தைய டெஸ்ட் போன்று வாகை சூடி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்வதில் ஆஸ்திரேலியா முனைப்பு காட்டுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
நேற்று பயிற்சிக்கு பிறகு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் முன் விளையாட இருப்பதை நினைத்தாலே பரவசமளிக்கிறது. ஒவ்வொருவரும் இந்த வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நிச்சயம் இது அருமையான சூழலாக இருக்கும். சொல்லப்போனால் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். சொந்த மண்ணில் இது போன்று அதிகமான ரசிகர்கள் கூட்டம் முன் விளையாடியதில்லை. எனவே உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன்.
இந்திய சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பு எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் இப்போது 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விட்டேன். உண்மையிலேயே இதை நம்ப முடியவில்லை. எதிர்பார்த்ததை விட எல்லாமே சீக்கிரம் (அறிமுகம்) நடந்து விட்டது. 3 டெஸ்டுகளில் விளையாடியதும், அதில் வெற்றிக்குரிய அணியில் அங்கம் வகித்ததும் அற்புதமான விஷயம். இது மிகச்சிறந்த ஒரு தொடர். நீண்ட காலம் எனது மனதில் நிலைத்து நிற்கும்.
இந்த தொடரில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை 3 முறை அவுட் செய்துள்ளேன். இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் கோலி எனது பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறிய, அந்த தருணத்தை மிகச்சிறந்ததாக உணர்ந்தேன். அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கான போராட்டத்தில் மகிழ்ச்சியோடு பந்து வீசுகிறேன்' என்றார்.
இந்த தொடரில் அறிமுக வீராக இறங்கிய 22 வயதான டாட் மர்பி இதுவரை 11 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்டுகளில் இந்திய விக்கெட் கீப்பர் கே. எஸ்.பரத்தின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. 5 இன்னிங்சில் வெறும் 57 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ஆமதாபாத்தில் நடக்கும் கடைசி டெஸ்டில் அவருக்கு பதிலாக அதிரடியாக ஆடக்கூடிய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ஏற்ப, நேற்று வலை பயிற்சியின் போது இஷான் கிஷனுடன், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிக நேரம் செலவிட்டதையும், ஆலோசனை வழங்கியதையும் பார்க்க முடிந்தது.
ஆனால் கே.எஸ்.பரத்துக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள டிராவிட், 'கே.எஸ்.பரத்தின் பார்ம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் நம்பிக்கையுடன் ஆடிய அவர் திருப்திகரமான பங்களிப்பு (23 ரன், நாட்-அவுட்) வழங்கினார். ஆனால் இங்குள்ள ஆடுகளத்தன்மையில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. அனேகமாக அந்த அதிர்ஷ்டம் அவருக்கு கிடைக்கவில்லை. மற்றபடி அவர் நல்ல நிலையில் இருக்கிறார். விக்கெட் கீப்பிங் பணியையும் சிறப்பாக செய்கிறார்' என்றார்.