முதல் டி20: மழையால் ஆட்டம் பாதிப்பு..! டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி


முதல் டி20: மழையால் ஆட்டம் பாதிப்பு..! டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி
x

தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

டப்ளின்,

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்திய அணி தரப்பில், ரோஹித், கோலி, ஹர்திக் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டாம் தர இந்திய அணியை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வழிநடத்துகிறார். முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு ஆபரேஷன் செய்துகொண்ட பும்ரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இணைந்துள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதையடுத்து அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 30 ரன்கள் எடுப்பதற்குள்ளாக 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆண்ட்ரூ பால்பிர்னி 4 ரன்களிலும் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து வந்த ஹாரி டெக்டர் 9 ரன்களில் அவுட்டானார்.

அந்த அணியில் அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர் 39 ரன்களும் மார்க் அடேர் 16 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய பேரி மெக்கார்த்தி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் , ருதுராஜ் கெயிக்வாட் .களமிறங்கினர்.

தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். .பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் இந்திய அணி எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை மீண்டும் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில்இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.


Next Story