வாழ்வா-சாவா ஆட்டத்தில் ஐதராபாத்: ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்...!
ஐபிஎல் தொடரில் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றியை சுவைத்த அந்த அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வியை சந்தித்தது. முந்தைய 2 ஆட்டங்களில் மும்பை, குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்த அந்த அணி நெருக்கடியில் தவிக்கிறது.
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (442 ரன்கள்) நல்ல நிலையில் இருந்தாலும், முதல் 4 ஆட்டங்களில் 3 அரைசதம் விளாசிய ஜோஸ் பட்லர் அதன் பிறகு 6 ஆட்டங்களில் அரைசதம் அடிக்காததுடன் 2 முறை ரன்னின்றி டக்-அவுட்டும் ஆகியது அந்த அணியின் ரன் குவிப்பு வேகத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
எனவே ஜோஸ் பட்லர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டியது அவசியமானதாகும். ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய மோதலில் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் எனலாம்.
ஐதராபாத் அணி 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ளது. அந்த அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா போராட்டமாகும். ஏனெனில் எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும்.
அந்த அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் ஒரு சேர சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஐதராபாத் அணியால், ராஜஸ்தான் அணியின் சவாலை சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.