நான் தான் உலகின் நம்பர் 1...விராட் கோலி எனக்கு பின்னால் தான் - பாக். வீரர்
நான் தான் உலகின் நம்பர் 1 வீரர் விராட் கோலி எனக்கு பின்னால் தான் என பாகிஸ்தான் வீரர் கூறியுள்ளார்.
கராச்சி,
கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரராக உருவெடுப்பது அரிது. அவ்வாறு உருவாகும் வீரர்கள் கிரிக்கெட்டில் தங்களுக்கென மிகப்பெரிய இடத்தை தக்கவைத்திருப்பர். அவ்வாறு கிரிக்கெட்டில் முதன்மை இடங்களில் இருப்பவர்கள் இந்தியாவின் சச்சின். இவர் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்துள்ளார். இதற்கடுத்து உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் டோனி.
ஐசிசி நடத்தும் அனைத்து மிக முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் இவர் மட்டுமே (ஒருநாள், டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி). இந்த சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல. இவர்களை போல் கிரிக்கெட்டில் தங்களது பெயரை நீண்ட காலத்துக்கு உச்சரிக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், கபில் தேவ், பிராட் மேன், ரிக்கி பாண்டிங், ரோகித் சர்மா, டிவில்லியர்ஸ், விராட் கோலி, கிறிஸ் கெய்ல் என வரிசை நீளும்.
சமீபகால கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக திகழ்பவர் இந்தியாவின் விராட் கோலி. சர்வதேச அரங்கில் சச்சினின் சாதனையை முறியடிக்க கூடியவராக தற்போது திகழ்ப்வர் இவர் மட்டுமே. இவருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தானிலும் இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். கடந்த 3 வருடங்களாக பார்ம் இன்றி தவித்து வந்த அவர் கடந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானிக்க்கு எதிராக சதம் அடித்து மீண்டும் பார்முக்கு திரும்பினார்.
அவர் கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை அடித்து அசத்தி உள்ளார். 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய இவரை உலகின் தலைசிறந்த வீரர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கோலியை விட நான் தான் சிறந்த வீரர் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
நான் கோலியுடன் என்னை ஒப்பிடவில்லை. உண்மை என்னவென்றால் 50 ஓவர் கிரிக்கெட்டில் யார் வேண்டுமானலும் முதல் 10 இடங்களில் இருக்கலாம், ஆனால் நான் தான் உலகின் நம்பர் 1 வீரர். கோலி ஒவ்வொரு 6 இன்னிங்சுக்கு சதம் அடிப்பதால் எனக்கு பின்னால் இருக்கிறார். நான் ஒவ்வொரு 5.68 இன்னின்சுக்கு ஒருமுறை சதம் அடிக்கிறேன். இது உலக சாதனையாகும். கடந்த 10 வருடங்களில் எனது சராசரி 53. மேலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நான் உலகின் 5வது இடத்தில் உள்ளேன்.
கடந்த 48 இன்னிங்வில் 24 சதங்கள் அடித்துள்ளேன். 2015 முதல் தற்போது வரை பாகிஸ்தானுக்காக யார் வேண்டுமானாலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியிக்கலாம் ஆனால், அவர்களை விட நான் முன்னணி வீரராகவே இருக்கிறேன். தேசிய டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை அதிக ரன் அடித்தவரும், சதம் அடித்தவரும் நான் தான். ஆனாலும் நான் புறக்கணிக்கப்படுகிறேன். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் என்னிடம் 8-9 சாதனைகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.