டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையின் 22 வருட கால சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்த இந்தியா...!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது.
டிரினிடாட்,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 438 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
2-வது இன்னிங்சில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. 5ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 12.2 ஓவர்களில் முதல் 100 ரன்களை அடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது முதல் 100 ரன்களை அடிக்க குறைவான பந்துகளை எதிர்கொண்ட அணி (12.2 ஓவர்) என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை அணி கடந்த 2001ம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிராக 13.2 ஓவர்களில் முதல் 100 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த 22 வருட கால சாதனையை முறியடித்து இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
முதல் 100 ரன்களை எடுக்க குறைவான பந்துகளை எதிர்கொண்ட அணி விவரம்:
1. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், 2023 - 12.2 ஓவர்
2. இலங்கை - வங்கதேசம், 2001 - 13.2 ஓவர்
3. இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா, 1994 - 13.3 ஓவர்
4. வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ், 2012 - 13.4 ஓவர்
5. இங்கிலாந்து - பாகிஸ்தான், 2022 - 13.4 ஓவர்