கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியா கடினமான இடமாக மாறி வருகிறது - ரவிச்சந்திரன் அஷ்வின்


கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியா கடினமான இடமாக மாறி வருகிறது - ரவிச்சந்திரன் அஷ்வின்
x

Image Courtesy: Instagram rashwin99/ruutu.131

இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கான இடம் பற்றி ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தத்தொடருக்கான இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித், ராகுல், ஷிகர் தவான், இஷன் கிஷன் ஆகியோருக்கு இடையே கடுமையாக போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணியில் இருந்து கேப்டன் ரோகித் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ராகுல் 5வது வரிசையில் களம் இறங்கியதுடன் விக்கெட் கீப்பிங் பணியையும் பார்த்துக் கொண்டார். விக்கெட் கீப்பர் இஷன் கிஷனுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அதேவேளையில் ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் இருந்து விலக்கப்படுவதாக பிசிசிஐ திடீரென அறிவித்தது.

இந்நிலையில் இந்தியாவில் நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது பற்றி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது யூ-டியூப் சேனலில் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

ருதுராஜ் இந்தியாவை சேர்ந்தவர், அவர் யாரை மாற்றுவார்?. மாற்றுவது கூட இல்லை, அணியில் இடம் கிடைக்க அவர் யாருடன் போட்டியிடுகிறார் என்று பாருங்கள். ஷகர் தவான், ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் அவ்வப்போது நாம் ரிஷப் பண்ட்டையும் நாம் தொடக்க வீரராக பயன் படுத்தி வருகிறோம்.

மேலும், உண்மையாக சொல்ல போனால் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான நாடு. ஏனென்றால், ஒரு இடத்துக்கு நிறைய பேர் போட்டியிடுவதால் சூடுபிடித்துள்ளது. ருதுராஜ் அதை சூடுபடுத்தவில்லை, அவர் தனது தலையில் சோலார் பேனலை வைத்துக் கொண்டு வேடிக்கையாக ரன்கள் அடிக்கிறார். அற்புதம், மிகச்சிறப்பானது ருதுராஜ் கெய்க்வாட்.

கண்டிப்பாக சொல்கிறேன் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். உலககிரிக்கெட்டை ருதுராஜ் கெய்க்வாட் சூடுபடுத்துவது காலத்தின் விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story