இந்திய அணியில் டாப் ஆர்டரில் 2 இடது கை பேட்ஸ்மேன்கள் அவசியம் - முன்னாள் பயிற்சியாளர் திட்டவட்டம்
இந்திய அணியில் டாப் ஆர்டரில் 2 இடது கை பேட்ஸ்மேன்கள் அவசியம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
மும்பை,
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்ய ஜிம்பாப்வேயில் தகுதிசுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் மிக முக்கியம்.
2011 உலகக்கோப்பையை வென்ற போது அணியில் கம்பீர், யுவராஜ், ரெய்னா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அதனால் உலககோப்பையில் சிறப்பாக செயல்பட இடது கை பேட்ஸ்மேன்கள் முக்கியம். இந்திய அணியில் டாப் ஆர்டரில் முதல் 6 இடங்களில் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் அவசியம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது,
அணியில் சரியான வீரர்களின் சேர்க்கை அவசியம். அணிக்கு இடது கை பேட்டர்கள் தேவை. தொடக்க நிலையில் இல்லாவிட்டாலும் 3 அல்லது 4ம் நிலையில் இடது கை பேட்டர்கள் இந்த உலகக்கோப்பைக்குத் தேவை. இத்தகைய விருப்பத் தெரிவுகளை எப்போதும் பரிசீலனையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக டாப் 6 பேட்டர்களில் 2 இடது கை வீரர்கள் இந்திய அணிக்கு அவசியம்.
நாம் நன்றாக ஆடும் போது இடது கை பேட்டர்களின் பங்களிப்பு பெரிய அளவில் தாக்கம் செலுத்தியுள்ளது. 2011 உலகக்கோப்பையில் கம்பீர், ரெய்னா, யுவராஜ் சிங் இருந்தனர். 1974 வெஸ்ட் இண்டீஸ் அணியில் பார்த்தால் ராய் பிரெடெரிக்ஸ், ஆல்வின் காளிச்சரண், கிளைவ் லாய்ட் இருந்தனர்.
1979-லும் இதே அணிச்சேர்க்கை அங்கு இருந்தது. 1983 அணியில் தான் இடது கை வீரர்கள் இல்லை. 1987-ல் ஆஸ்திரேலியாவில் ஆலன் பார்டர் டாப் ஆர்டர் நிலையில் இடது கை பேட்டராக திகழ்ந்தார். பின் வரிசையில் 2-3 இடது கை பேட்டர்கள் இருந்தனர். 1996 உலகக்கோப்பையில் ஜெயசூரியா, ரணதுங்கா, அசங்கா குருசிங்கா ஆகியோர் இலங்கை அணி கோப்பையை வெல்வதில் கடும் பங்களிப்பு செய்தனர்.
1999-2003-ல் ஆஸ்திரேலியாவிடம் கில்கிறிஸ்ட், ஹெய்டன் போன்றோர் இருந்தனர். ஹாட்ரிக் உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா தட்டிச் செல்லும் போது இடது கை பேட்டர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. இந்திய அணியில் இப்போது போதுமான இடது கை பேட்டர்கள் இருக்கின்றனர். இஷான் கிஷன், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் எந்த ஒரு சீனியர் வீரரையும் ரீப்ளேஸ் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.